பிடித்த பத்து/உரை 33-36

விக்கிநூல்கள் இலிருந்து

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

செல்வமே சிவபெரு மானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.


பதப்பொருள் :


பால் - பாலை, நினைந்து ஊட்டும் - காலமறிந்து கொடுக்கின்ற, தாயினும் - தாயைக்காட்டிலும், சாலப்பரிந்து - மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய, ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி, உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் ஞானத்தைப் பெருக்கி, உலப்பிலா - அழியாத, ஆனந்தம் ஆய - இன்பமாகிய, தேனினைச் சொரிந்து - தேனைப் பொழிந்து, புறப் புறம் திரிந்த - நான்கு புறங்களிலும் உடன் திரிந்த, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்கம் :

தாய் இனம், கடை, இடை, தலை என முப்பிரிவினது, குழந்தை அழுதாலும் பால் கொடுக்காதவள் கடையாய தாய்; அழும்போது கொடுப்பவள் இடையாய தாய்; காலம் அறிந்து கொடுப்பவள் தலையாய தாய். இறைவனோ, காலமறிந்து கொடுக்கும் தாயினும் மிக்க அன்புடையவன் என்பார், 'பால்நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து' என்றார். உடலை வளர்க்கும் தாயைக்காட்டிலும் உயிரை வளர்க்கும் தாயாய் இருப்பவனாதலின், இறைவன் 'ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி அருளினான்' என்பதும் இது பற்றியேயாம். இனி, உள்ளத்திலே இன்பத்தினை நல்கிப் புறத்தேயும் காக்கின்றான் ஆதலின், 'தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே' என்றார். 'யானும் உள்ளும் புறமும் தொடர்ந்து பற்றினேன்' என்பார், 'யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்' என்றார்.

இதனால், இறைவன் உயிர்கள்மாட்டுப் பேரருளுடையவன் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து/உரை_33-36&oldid=2388" இலிருந்து மீள்விக்கப்பட்டது