உள்ளடக்கத்துக்குச் செல்

பிடித்த பத்து/உரை 37-40

விக்கிநூல்கள் இலிருந்து

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்

பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்

என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட

ஈசனே மாசிலா மணியே

துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்

தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.


பதப்பொருள் :

புன்புலால் யாக்கை - அற்பமாகிய புலால் உடம்பு, புரைபுரை கனிய - மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியடைய, அது, பொன் நெடுங்கோயிலா - பொன்னாலாகிய பெரிய கோயிலாகும்படி, புகுந்து - அதனுள் எழுந்தருளியிருந்து, என் என்பு எலாம் உருக்கி - என்னுடைய எலும்புகளையெல்லாம் உருகும்படி செய்து, எளியை ஆய் - எளியவனாகிய, ஆண்ட - ஆட்கொண்டருளின, ஈசனே - ஆண்டவனே, மாசு இலா மணியே - குற்றமற்ற மாணிக்கமே, துன்பமே - துன்பமும், பிறப்பே - பிறப்பும், இறப்பொடு - இறப்பினோடு, மயக்கும் ஆம் - மயக்கமும் ஆகிய, தொடக்கு எலாம் அறுத்த - பற்றுகளெல்லாம் அறுத்தருளின, நல் சோதீ - மேலான சோதியே, இன்பமே - ஆனந்தமே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்கம் :

இறை நினைவால் உடம்பில் மயிர்க்கூச்செறிய இன்பம் சுரத்தலால், புலால் உடம்பு பொன்னுடம்பாக மாறும் என்பார், 'புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலா' என்றார். எலும்பு உருகுவது இறைவன் கருணையை எண்ணுவதாலாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், பிறப்பு இறப்பாகிய கட்டுகள் நீங்குமாதலின், 'பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ என்றார்.

இதனால், இறைவன் பிறப்பு இறப்புகளால் வரும் துன்பத்தைப் போக்கியருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து/உரை_37-40&oldid=2389" இலிருந்து மீள்விக்கப்பட்டது