பிடித்த பத்து/உரை 9-12
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் :
அம்மையே - தாயே, அப்பா - தந்தையே, ஒப்பு இலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே, அன்பினில் விளைந்த - அன்பாகிய கடலில் உண்டாகிய, ஆர் அமுதே - அருமையான அமுதமே, பொய்ம்மையே பெருக்கி - பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து, பொழுதினைச் சுருக்கும் - காலத்தை வீணாகக் கழிக்கின்ற, புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, செம்மையே ஆய - மிக மேன்மையான, சிவபதம் அளித்த - சிவபதத்தைக் கொடுத்தருளின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இம்மையே - இவ்வுலகிலேயே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
விளக்கம் :
பொய்ம்மையே பெருக்குதலாவது, உயிருக்கு உறுதி பயக்கும் நன்மையான செயலைச் செய்யாது தீமையான செயலைச் செய்தலாம். பொழுதினைச் சுருக்கலாவது, வாழும் நாள்களில் பயன்தரும் நாள்கள் மிகச் சிலவாகச் செய்தல். 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே' என்று திருநாவுக்கரசர் அருளிச் செய்தல் காண்க. நன்மை செய்து வாழ்ந்தால் இறைவனை இம்மையே பற்றலாம் என்க.
இதனால், இறைவன் கீழ்மையான நிலையிலுள்ளார்க்கும் உயர்ந்த நிலையை அளித்து ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது.