மருத்துவ வினா விடைகள்/சர்க்கரை நோய்

விக்கிநூல்கள் இலிருந்து

சர்க்கரை நோய் என்றால் என்ன ?[தொகு]

மனித உடல் இயங்குவதற்குத் தேவையான ஆற்றல் சர்க்கரை, புரதம், கொழுப்பு ஆகிய மூன்றில் இருந்து பெறப்படுகிறது. இம் மூன்றனுள் முதன்மையானது சர்க்கரை. சர்க்கரைகளில் பல வகை உண்டு. குளுக்கோசு, ஃபிரக்டோசு, கேலக்டோசு, ஸ்டார்ச் என்பன அவ்வகைகளுள் சில. இவை யாவும் மனித உடலுக்கு அவசியம் தானெனினும் ஆற்றல் உருவாதலில் குளுக்கோசு தான் நேரடியாகப் பங்காற்றுகிறது. உணவில் உள்ள சர்க்கரைகள் செரிமானமடைந்து குளுக்கோசு கிடைக்கிறது. இது செல்களுக்கு உள்ளே செல்ல வேண்டுமானால் சில புரதவாயில்கள் (Glucose transporters) தேவை. குடல், இரத்த சிவப்பணு, மூளை மற்றும் பல உறுப்புகளின் செல்களின் புரதவாயில்கள் வழியாக குளுக்கோசு எளிதாகக் கடந்து விடும். ஆனால், தசை செல்கள் மற்றும் கொழுப்பு செல்களின் புரத வாயில்கள் வழியாக குளுக்கோசு செல்ல வேண்டுமானால் இன்சுலின் எனும் வளரூக்கி (ஹார்மோன்) தேவை. இன்சுலின் இல்லையென்றால் இரத்தத்தில் குளுக்கோசு அதிகமாக இருக்கும். ஆனால் தசை செல்களுக்குள் குளுக்கோசு செல்ல இயலாது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாக அவை பட்டினி கிடக்க வேண்டியது தான்.

இரத்தத்தில் குளுக்கோசு அதிகமாக இருந்தால் என்ன ? நல்லது தானே, நிறைய ஆற்றலுடன் இருக்கலாம் என நினைக்கலாம். மிகையான இந்த குளுக்கோசு கொழுப்பாக மாற்றப்பட்டுக் கொழுப்பு அளவைக் கூட்டி விடும். இது இரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும். அதுமட்டுமின்றி குளுக்கோசு புரதங்களுடன் இணைந்து சில தேவையற்ற வேதிப்பொருட்களை (Advanced Glycation End products) உண்டாக்கி இயல்பான உடலியங்கியலையே கெடுத்து விடும்.

மேற்கூறியவற்றில் இருந்து இன்சுலினின் இன்றியமையாமையை ஒருவர் அறியலாம். இத்தகைய இன்சுலினின் செயல்பாடு இல்லாத நிலையே சர்க்கரை நோய் ஆகும். இது இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது இன்சுலின் செயல்பட முடியாததாலோ ஏற்படலாம்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று உறுதியாக எப்போது கூறலாம் ?[தொகு]

சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா ?[தொகு]

சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் அறிவுரைப்படி சரிவர மாத்திரை மருந்துகள் உட்கொண்டு உடற்பயிற்சியும் நல்உணவுப்பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்தால் இரத்த சர்க்கரை அளவு பழையபடி இயல்பான அளவுக்கு வந்து விடும். சரி, இனி மாத்திரைகளை நிறுத்தி விடலாம் என மாத்திரைகளை நிறுத்த முடியாது. தற்போதைக்குள்ள மருத்துவ அறிவின் படி, "சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது!" வாழ்நாள் முழுதும் மருந்து சாப்பிடுவதைத் தவிர வேறுவழி இல்லை.

சர்க்கரை நோயாளிகள் உணவின் சர்க்கரை உயர்த்தல் குறியீட்டை ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ?[தொகு]

சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index) என்பது ஓர் உணவுப்பொருளானது, இரத்த குளுக்கோசு அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கும் ஓர் அளவீடு. சாப்பிட்ட உடனே இரத்த குளுக்கோசு அளவைக் கூட்டும் உணவுப் பொருளுக்கு குறியீட்டு மதிப்பு அதிகமாக இருக்கும். கீழே உள்ள அட்டவணையில் சில உணவுப் பொருட்களின் குறியீட்டு மதிப்புகள் தரப்பட்டுள்ளன.

வகை சர்க்கரை உயர்த்தல் குறியீடு உதாரணம்
குறைவான 55 அல்லது அதற்கும் கீழ் முழு தானியம், பயறு வகைகள், ஃபிரக்டோசு, பெரும்பாலான காய் கனிகள்
நடுத்தர 56–69 முழு கோதுமை, பாஸ்மதி அரிசி, இனிப்பு உருளை, சுக்ரோசு
அதிக 70 மற்றும் மேலே வெள்ளை பிரட், வெள்ளை சாதம், கார்ன் ஃபிளேக், குளுக்கோசு, மால்டோசு

சர்க்கரை நோயாளிகளின் முக்கியப் பிரச்சினையே இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. இப்படி இருக்கையில் அவர்கள் இரத்த சர்க்ரையை உடனடியாகக் கூட்டும் உணவை எடுத்துக் கொள்ளலாமா ? கூடாதல்லவா!