1-ஆந் திருமொழி - மெச்சூது
Appearance
|
--வெ.ராமன் 11:04, 1 பெப்ரவரி 2006 (UTC)
பூச்சிகாட்டி விளையாடுதல்
[தொகு]கலித்தாழிசை
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி* பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்* பத்தூர் பெறாதுஅன்று பாரதம் கைசெய்த* அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (1)
மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்* பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய* பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற* செங்கண் அலவலைவந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (2)
காயும்நீர் புக்குக் கடம்பேறி* காளியன் தீய பணத்தில் சிலம்பாக்கப் பாய்ந்தாடி* வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற* ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (3)
இருட்டில் பிறந்துபோய் ஏழை வல்லாயர்* மருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன் மாளப்* புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக் கொண்ட* அரட்டன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (4)
சேப்பூண்ட சாடுசிதறி* திருடிநெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத்தாம்பால்* சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க* அன்று ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (5)
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு* சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த* துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய* அப்பன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (6)
தத்துக் கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?* சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்* கொத்தார் கருங்குழல் கோபாலகோளரி* அத்தன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (7)
கொங்கைவன் கூனிசொற் கொண்டு* குவலயத் துஙகக் கரியும் பரியும் இராச்சியமும்* எங்கும் பரதற் கருளி வன்கானடை* அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (8)
பதக முதலைவாய்ப் பட்ட களிறு* கதறிக்கை கூப்பி என்கண்ணா! கண்ணா! என்ன* உதவப் புள்ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த* அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான். (9)
தரவுகொச்சகக்கலிப்பா
வல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த* வில்லாளனை விட்டுசித்தன் விரித்த* சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும்* வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே . (10)
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .