8-வது திருமொழி - இந்திரனோடு

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 07:48, 14 பெப்ரவரி 2006 (UTC)

திருவந்திக்காப்பிடல்[தொகு]

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்*
மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் உவந்து நின்றார்*
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்!*
அந்தியம் போதுஇது வாகும் அழகனே!காப்பிட வாராய்.             (1)
கன்றுகள் இல்லம் புகுந்து கதறு கின்றபசு வெல்லாம்*
நின்றொழிந்தேன்உன்னைக் கூவி நேச மேலொன்று மிலாதாய்!*
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்!*
நன்றுகண்டாய் என்தன் சொல்லு நான்உன்னைக் காப்பிட வாராய்.    (2)
செப்போது மென்முலை யார்கள்  சிறுசோறும் இல்லும்சிதைத் திட்டு*
அப்போது நானு ரப்பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்!*
முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!*
இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான்! காப்பிட வாராய்.     (3)
கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று*
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படு கின்றார்*
கண்ணனே!வெள்ளறை நின்றாய்! கண்டா ரோடே தீமை செய்வாய்!*
வண்ணமே வேலைய தொப்பாய்! வள்ளலே! காப்பிட வாராய்.      (4)
பல்லா யிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
எல்லாம் உன்மேலன்றிப் போகாது எம்பிரான்! நீஇங்கே வாராய்*
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச் சுடரே! உன்மேனி*
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்.        (5)
கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை*
வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும் உண்டு*
மஞ்சுதவழ் மணிமாட மதிள்திரு வெள்ளறை நின்றாய்!*
அஞ்சுவன் நீஅங்கு நிற்க அழகனே! காப்பிட வாராய்.               (6)
கள்ளச் சகடும் மருதும் கலக்கழியஉதைசெய்த*
பிள்ளை யரசே!நீபேயைப் பிடித்து முலையுண்ட பின்னை*
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே! காப்பிட வாராய்.          (7)
இன்ப மதனை உயர்த்தாய்! இமையவர்க்கு என்றும் அரியாய்!*
கும்பக் களிறட்ட கோவே!  கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!*
செம்பொன்மதிள்  வெள்ளறையாய்! செல்வத்தினால் வளர்பிள்ளாய்!*
கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.            (8)
இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறையோர் வந்து நின்றார்*
தருக்கேல் நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்*
திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்*
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்.(9)
போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறையானை*
மாதர்க்குயர்ந்த அசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்*
வேதப்பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை*
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தருள்ளார் வினைபோமே.           (10)
         பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=8-வது_திருமொழி_-_இந்திரனோடு&oldid=3248" இலிருந்து மீள்விக்கப்பட்டது