8-வது திருமொழி - மாதவத்தோன்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
--வெ.ராமன் 09:50, 10 மே 2006 (UTC)

     திருவரங்கம்

     தரவு கொச்சகக்கலிப்பா

மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை* 
ஓதுவித்ததக் கணையா உருவுருவே கொடுத்தானூர்* 
தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும்* 
போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே. 1

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்*
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்*
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்*
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.  2

மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்*
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்*
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை
பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே.   3

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய*
கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்*
தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே. 4 

பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை*
உருவரங்கப் பொருதழித்து இவ்வுலகினைக் கண்பெறுத்தானூர்*
குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்*
திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.    5

கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே*
ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்*
தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து*
யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே.  6

கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய*
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்*
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு*
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.   7

வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்*
எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்*
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி*
மல்லிகை வெண்சங்கூதும் மதிளரங்க மென்பதுவே.   8

குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்*
நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்*
குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி*
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.     9

பருவரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை*
செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு*
இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லாரடியோமே.    10

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.